திருப்பூர் : "அதிகரித்து வரும் மின்தடை உள்ளிட்ட பிரச்னைகளால், திருப்பூர் பின்னலாடை வர்த்தகம் 10 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது,' என, சிஸ்மா சங்கம் கவலை தெரிவித்துள்ளது. திருப்பூரில் ஆயிரத்துக்கும் அதிகமான பனியன் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தினமும் இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு பனியன் ஜவுளி உற்பத்தி செய்யப்படுகின்றன. தொடர் மின்வெட்டு காரணமாக, ஜெனரேட்டர் வாங்க முடியாத சிறுபனியன் உற்பத்தியாளர்கள் அரைநாள் வேலையிழந்து தவிக்கின்றனர். சிறு பனியன் மற்றும் இரண்டாம்தர பின்னலாடை உற்பத்தியாளர்கள் (சிஸ்மா) சங்க பொது செயலாளர் பாபுஜி கூறியதாவது:மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வாரம் 16 முதல் 18 "ஷிப்ட்' வேலை நடந்த நிறுவனங்களில், தற்போது எட்டு 'ஷிப்ட்' வேலை கூட நடப்பதில்லை. இதனால், உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். அறிவிக்கப்பட்டு மூன்று மணி நேரமும், அறிவிக்கப்படாமல் ஒரு மணி நேரமும் மின்தடை ஏற்படுகிறது. இதனால், தினமும் அரை "ஷிப்ட்' பனியன் உற்பத்தி பாதிக்கப்படுகிறது."ஷிப்ட்' கணக்கில் தொழிலாளர்கள் வேலை செய்யும் நிறுவனங்களில் உற்பத்தியாளர்களும்,"பீஸ்÷ ரட்' அடிப்படையில் நடக்கும் நிறுவனங்களில் தொழிலாளர்களும் நஷ்டம் அடைகின்றனர்.மத்திய அரசின் மெத்தனப் போக்கால், திருப்பூர் பனியன் சாம்ராஜ்ஜியமே 10 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்டது. மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப அரும்பாடுபட வேண்டியிருக்கும். கலால் வரி விதிப்பால், உள்நாட்டு வர்த்தகமும், சிறுபனியன் உற்பத்தியும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நேரத்தில், மின்வெட்டு நேரம் அதிகரிப்பது தொழிலை அமுக்கிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
சிறு பனியன் உற்பத்தியாளர்கள் ஜெனரேட்டர் வைத்து ஓட்டும் அளவுக்கு வசதி படைத்தவர்கள் அல்ல. ஜெனரேட்டர் வைத்துள்ள சில நிறுவனங்களும், வரி விதிப்பு அச்சுறுத்தலால், மின்தடை நேரத்தில் உற்பத்தியை நிறுத்துகின்றன. ஒரு நாளில், நான்கு மணி நேரம் வரை மின்தடை ஏற்படுவதால், அரை "ஷிப்ட்' வேலை கெட்டுப்போகிறது. சாயப்பிரச்னை, கலால் வரி பிரச்னைகளால், ஏற்கனவே 40 முதல் 60 சதவீதம் உற்பத்தி பறிபோய் விட்டது. பெயரளவுக்கு தொழில் நடந்தாலும், மின்வெட்டு அதையும் கெடுத்துவிடுகிறது. மத்திய, மாநில அரசுகள் மெத்தனம் காட்டாமல், உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும். மிகப்பெரிய அன்னிய நிறுவனங்களுக்கு சலுகை காட்டும் மத்திய, மாநில அரசுகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் முடக்கிவிட திட்டமிடுவது போல் தோன்றுகிறது. உத்தரபிரதேசம், குஜராத், கோல்கட்டாவில், பின்னலாடை தொழில்துறையினருக்கு அதிக சலுகை அளிக்கப்படுகிறது. அம்மாநில நிறுவனங்கள், பல்வேறு மாநிலங்களிலும் கால்பதித்து வருகின்றன. இதனால், திருப்பூர் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படும். இந்நிலையில், மின்தடையால் பெரும் சோதனை கொடுத்தால், இத்தொழில் வேறு நகரத்துக்கு மாறிவிடும். மத்திய, மாநில அரசுகள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன், நடப்பதை மாற்றிக்கொண்டு, திருப்பூர் சிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்களுக்கு சலுகை விலையில், தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும், என்றார்.
Thanks: - Dinamalar.com